பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Saturday, October 02, 2004

எனது முதல் பதிவு

முதலில் என்ன எழுதலாம் என யோசித்த பொழுது, எனது பங்குச் சந்தை அனுபவத்தை எழுதலாம் என்று தோன்றியது.

"நடக்கும் என்பார், நடக்காது...நடக்காது என்பார், நடந்து விடும்"

இது எதற்குப் பொருந்துமோ இல்லையோ...பங்குச் சந்தைக்கு மிகவும் பொருந்தும்.

ஒரு நான்கு வருடம், ஒரு பெரிய அமெரிக்க stock broking நிறுவனத்தின் செயலிகளை கட்டி மேய்த்திருப்பதன் வாயிலாக பங்குச் சந்தைப் பற்றி அறிந்திருக்கிறேன். அந்த இருமாப்பில் களத்தில் குதித்த பொழுது தான் அது ஒரு புரியாத புதிர் என்று புரிந்தது. அது எனக்கு மட்டும் புதிர் இல்லை, இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும் கூட அப்படித்தான் போலும்.நான் கணக்கு வைத்திருக்கும் பங்கு நிறுவனம், இந்த பங்குகளை இந்த விலைக்கு வாங்கி இந்த விலைக்கு விற்கலாம் என டிப்ஸ் கொடுப்பார்கள், ஒரு நாள் சில ஆயிரங்கள் கிடைத்த சந்தோசத்தில், அடுத்த நாள் அவர்களின் டிப்சை அப்படியே பின் பற்றினால் கையை கடிக்கும்.விலை ஏறியது போதும் என்று பங்குகளை விற்ற அடுத்த நிமிடம், விலை இன்னும் சில ரூபாய்கள் எகிறி கடுப்பேற்றும். குறைந்த விலைக்கு வாங்குகிறோம் என்ற எண்ணத்தில் வாங்கிய பங்குகள் வாங்கியவுடன் இன்னும் விலை குறைந்து எப்பொழுது ஏறும் என டென்ஷனுடன் கணினி திரையை பார்த்து வெறுத்து போகும்.

Intra day முறையில் பங்குகளை வாங்கி விற்பது போன்ற டென்ஷனான வேலை வேறு எதுவும் இல்லை.சில நொடிகளில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இழப்பு ஏற்பட்டால் சில மணித்துளிகளில் சில ஆயிரங்கள் காணாமல் போகும்.வெளிப்புறத்தில் சூதாட்டம் போல தோன்றினாலும் அதன் நுட்பம் அறிந்து, எற்படும் இழப்புகளை சரிக்கட்டி பொறுமையாக மதி நுட்பத்துடன் முதலீடு செய்தால் இது பணத்தை அறுவடை செய்யும் இடம் தான்.

அடுத்தவர்கள் டிப்சை மட்டும் நம்பாமல், தினசரி செய்திகளையும் அது பங்குச் சந்தையில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளையும் கணிக்க வேண்டும். அந்த நாளில் குறிப்பிட்ட துறைகளையும், பங்குகளையும் நமது இலக்காக கொள்ள வேண்டும். பங்குகளின் ஏறு முகத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அது சரிந்தால் எந்த அளவுக்கு சரியும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்(Stop Loss).சரியான நேரத்தில் பங்குச் சந்தையில் நுழைவதும், விற்பதும் ஒரு கலை தான். அது எனக்கு இது வரை கைகூட வில்லை. நீங்கள் அறிந்திருந்தால் சொல்லுங்களேன் ?


சரி...எனக்கு நேரமாகி விட்டது. இன்று ஒரு முக்கிய வேலை இருக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பத்ரி தோன்றுகிறார்.கண்டு மகிழப் போகிறேன். காந்தி ஜெயந்தியன்று என்ன ஒரு பொருத்தமான படம். பத்ரி நாடுக்காக ஆற்றும் சேவைகளையும், தியாகங்களையும் காந்தி ஜெயந்தியன்று கண்டு புல்லரிக்கலாம்.ஒரு பொருத்தமான படத்தை இந்தத் திருநாளில் திரையிடும் சன் டிவிக்கு கோடி நமஸ்காரம்.

பின்னூட்டம்